பாலா இயக்கத்தில், த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா நேற்று ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு பக்கம், நல்லவேளை இந்த படத்தை த்ருவின் அறிமுக படமாக ரிலீஸ் செய்யப்படவில்லை என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம், ஆதித்ய வர்மாவுக்கு, வர்மா எவ்வளவோ மேல் என்று சொல்கின்றனர். ஆனால், 2கே கிட்ஸ் மத்தியில் மீம் டெம்பிளேட்டுக்கான படமாகதான் இது பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வர்மா திரைப்படம் விக்ரமிற்காக அதுவரை செய்யாததை பாலா செய்ததால் உருவானது. ஆம், பாலா இதுவரை ரீமேக் படங்கள் எதுவும் இயக்கதில்லை. அவர் படப்புகள் அனைத்துமே மண் சார்ந்து, விளிம்பு நிலை மக்கள் சார்ந்து அமைந்த கதைகள். எனவே பாலா இந்த படத்தை இயக்கும் செய்தி வெளியானபோது ஆச்சரியத்துடனே பார்க்கப்பட்டது.
தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய 'சேது' திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் பாலாவையே தன் மகனது முதல் படத்தையும் உருவாக்க கேட்டுக்கொண்டார் விக்ரம். பொதுவாக பாலா படங்கள் அதிக நாட்கள் தயாரிப்பில் இருக்கும். 'அவன் இவன்', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' படங்கள் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில், தன் நிலையை சரி செய்ய 'நாச்சியார்' திரைப்படத்தை குறுகிய காலத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி வெற்றியை பெற்றார் பாலா. 'நாச்சியார்' வெளியான பின் திரைப்பட தயாரிப்பளர்களின் ஸ்ட்ரைக்கால் அடுத்து புதிய படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் வசூலை அள்ளியது நாச்சியார். 'கலகலப்பு 2' படமும் ஸ்ட்ரைக்கால் லாபம் பார்த்த இன்னொரு படம்.
'நாச்சியார்'க்கு பிறகு 'வர்மா' படத்தை இயக்கினார் பாலா. இதுவரை ரீமேக் படங்களை எடுக்காத பாலா, தன் நண்பர் விக்ரமுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்தார். அறிவிப்பு வெளிவந்த பொழுது சினிமா ரசிகர்கள் இதுகுறித்து ஆச்சரியப்பட்டனர். பாலாவின் ஸ்டைலுக்கு சற்றும் சம்மந்தமில்லாத படத்தை எப்படி எடுப்பார் என்ற கேள்வியும் இருந்தது. அந்த கேள்வி நியாயமானதே என்பதை ஓடிடி வெளியாகியிருக்கும் வர்மா நிரூபித்துள்ளது.