கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது இயக்குநர்கள் அட்லீ, அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் அமரன் படத்தை பாராட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமரன் படம் ரொம்ப நல்லாயிருக்கு. தமிழக இளைஞர்கள், மத்தியில் இருக்கும் ராணுவம் நம்முடைய நாட்டை எப்படி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு இந்தப் படம் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் ரொம்ப நாளுக்குப் பிறகு தேசப்பற்று இருக்கக்கூடிய படமாக அமரன் படத்தை பார்க்கிறோம். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஹீரோ, இயக்குநர் என இரண்டு பேரும் நல்லா பண்ணியிருக்காங்க. இது போன்ற படங்களை கமல்ஹாசன் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவி விநியோகம் செய்தது கூடுதல் சிறப்பு. அவர்களுக்கு வியாபாரம் பெருகட்டும். வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தை பள்ளி, கல்லூரி குழந்தைகளுக்கு இலவசமாக போட்டுக் காட்ட வேண்டும். மாநில முதல்வர் ரசித்த அமரன் படத்தை மாணவ செல்வங்களும் ரசிக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை” என்றார்.