பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் காது கேட்க முடியாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக அருண் விஜய் நடித்துள்ளார். மேலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் வணங்கான் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில் பாலா, அருண் விஜய், சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் அவர்கள் பதிலளித்தனர். அப்போது பாலாவிடம், இந்தப் படம் உண்மையாக நடந்ததா, இல்லை செய்திகளில் வந்ததா மற்றும் ஹீரோ மாற்றுத்திறனாளியாக வடிவமைத்தற்கான காரணம் ஏன் என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலா, “படத்தில் வரும் சம்பவம் உண்மையாக நடந்தது. சென்னையில் ஒரு பள்ளியில் நடந்தது. அதை என்னால் இப்போது சொல்ல முடியாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பேசி பேசித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற இந்த காலகட்டத்தில் பேசாமலும் புரிய வைக்கலாம் என்று எடுத்துக்கொண்ட முயற்சி” என்றார்.