ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘பனை’. ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, தயாரிப்பாளரும் கதாசிரியருமான எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், கவிஞர் சொற்கோ, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அப்போது வைரமுத்து பேசுகையில், “ஒரு படத்திற்கு தலைப்பு என்பது மிக மிக அவசியம். கடந்து போவது எளிது ஆனால் கடந்து செல்லும் போதே ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது வருகிற தமிழ்ப் படங்களின் தலைப்புகளை பார்க்கும் போது நான் கொஞ்சம் துக்கப்படுகிறேன், சில நேரங்களில் வெட்கமும் படுகிறேன். அந்தப் பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, அது வெறும் சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம், தமிழில் தலைப்புகளுக்கா பஞ்சம், தமிழில் அழகான சொல்லாடலுக்கா பஞ்சம். நல்ல பெயர்களைத் தனித்துவமான பெயர்களை ஏன் நீங்கள் சூடக் கூடாது என்று பார்க்கிறேன்.
தலைப்பு என்றால் நெஞ்சை தைக்க வேண்டாமா?, என் இருதயத்துக்குள் சென்று பசைப்போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா?, என் நா திருப்பி உச்சரிக்க வேண்டாமா?, தலைப்பு என்பது ஒரு படத்துக்கு ஒரு கருத்தை சொல்வதாகவும், இன்னொன்று ஒரு காட்சியை விரிய செய்ய வைப்பதாகவும், அது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும், அமைய வேண்டும் என்ற வகையில்தான் நம் முன்னோர்கள் தலைப்பு வைத்தார்கள். பழைய தலைப்புகளைப் பார்த்தால், அந்தத் தலைப்புகளில் கதை வரும். ’மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்’ என்றால் ஒரு சமூகத்தின் பண்பாடே வந்துவிடும். ’கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று சொன்னவுடன் ஒரு கலாச்சாரத்தின் விழிமியம் வந்துவிடுகிறது. அதெல்லாம் பழசு என்பது நமக்கு தெரியும், ஆனால் அந்த வழியில் வருகிறவர்கள் தலைப்புகளில் ஒரு ஆழ்ந்த கவனத்தை செலுத்தி, நிகழ்காலத்தின் பொருள் குறித்தும், நிகழ்காலத்தின் மாற்றம் குறித்தும், நமது விழிமியப்போக்குகள் எது விழுகிறது, எது எழுகிறது என்பது குறித்தும் இந்தத் தலைப்புகள் எதாவது மக்களுக்கு சொல்லிச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தலைப்பு வைக்கிற தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதையாசிரியர்கள் தயவு செய்து அழகான தமிழ் பெயர்களைப் படத்துக்குச் சூட்ட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு கவிஞனின் வேண்டுகள் அல்லது ஒரு பாடலாசிரியனின் வேண்டுகள் என்று நினைத்து விடாதீர்கள், இது தமிழ் மக்களின் வேண்டுகோள், பாமரனின் வேண்டுகோள், உழவனின் வேண்டுகோள், மூட்டை தூக்குகிற தொழிலாளியின் வேண்டுகோள், விறகு வெட்டியின் வேண்டுகோள். அவன் தமிழோடு இருக்க விரும்புகிறான், ஆனால் நீங்கள் தள்ளி நிற்கிறீர்கள். நான் ஒன்று கேட்கிறேன், தமிழுக்கு மாறுபட்ட மொழியில் நீங்கள் தலைப்பு வைத்து அந்தப் படம் வெற்றி பெறுகிறது என்றால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்தப் படம் வெற்றியும் பெறுவதில்லை என்ற போது, ஏன் நீங்கள் அப்படி தலைப்பு வைக்கிறீர்கள்?” என்றார்.