
வடிவேலு நடிப்பில் உருவான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென்று படத்தில் இருந்து விலகினார். இதனால் படப்பிடிப்புக்காக ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்டு படக்குழுவினர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து நடிகர் வடிவேலு ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, படப்பிடிப்பிற்கான செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.
இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த செய்தியை தற்போது இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. அதன்படி... "வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது. சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்" என்று படக்குழு அறிவித்துள்ளது. அப்படி வடிவேலு மீது ரெட்கார்டு போடும் பட்சத்தில் அவரின் சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.