முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மொழி படங்களான 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு பாடலும் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படமும் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனால் இரண்டு படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த மாநிலங்களவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸின் கதைமாந்தர்களான பழங்குடியின தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளியை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் இரண்டு பேருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார்.
இந்த நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படங்களை பாராளுமன்றத்தில் திரையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தில், பால் யோகி அரங்கத்தில் அடுத்த வாரம் திரையிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்கர் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இரண்டு படக்குழுவினரையும் கௌரவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான பணிகளில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தற்போது ஈடுபட்டு வருவதாக பேசப்படுகிறது.