நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.
இந்த திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. முன்னணி திரைப் பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள திரையரங்கு ஒன்றில் 'காந்தாரா' திரைப்படத்தைப் பார்த்து ரசித்தார். அப்போது படக்குழுவினர் மற்றும் பா.ஜ.க.வினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், 'காந்தாரா' திரைப்படம் குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் 'காந்தாரா' கன்னட திரைப்படத்தை தன்னார்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அடங்கிய குழுவுடன் பார்த்தேன். நமது செழுமையான பாரம்பரியங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தொலைபேசி மூலம் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு மத்திய நிதியமைச்சர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.