நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் சமீபத்தில் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலை அறிமுகப்படுத்திய அவர், கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்டிருந்தனர். இதற்காக செப்டம்பர் 23ஆம் தேதி காவல் துறையிடம் அனுமதி கேட்டு நிபந்தனையுடன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாநாடு தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காவல் துறை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தவெக பொதுச் செயலாலர் ஆனந்த், மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கு வருபவர்கள் குடித்துவிட்டு வரக்கூடாது, பெண் காவலர்கள் மற்றும் பெண்களை கிண்டல் செய்யக்கூடாது, இரு சக்கர வாகனங்களில் ஆபத்தான ஸ்டண்ட் எதுவும் செய்யக்கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது, வாகனங்களில் அதிக அளவில் ஆட்கள் ஏற்றக் கூடாது, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அரசு அதிகாரிகளை மதிக்க வேண்டும் என ஆனந்த் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.