பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார். இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சன் தன் இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில்...
“சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த இயக்குநர்களாக மிளிர்வது அரிதாகவே நிகழ்கின்றன. திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை கற்காமலேயே நேர்த்தியான தொழில்நுட்பத்தின் மூலம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி.ஆனந்த். ‘கோ’ தமிழ்த் திரைப்படம் பார்த்த பின் அவருடன் என்னால் பேசாமல் இருக்க இயலவில்லை. அது, இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே மிகச்சிறந்த அரசியல் திரைப்படம். குறிப்பாக தற்கால அரசியல் குறித்த ஒரு குறியீட்டுப் படம்.
‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் பணியாற்றும்போது நண்பர்கள் ஜீவா, ஆனந்த் இருவருடனும் அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி சந்திக்காமல் போனாலும் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதலும் அன்பும் மதிப்பும் குறையாமல் இருந்தது.
நட்சத்திர நடிகர்களைக் கொண்டு படங்களை இயக்குவது அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைந்தது. பெரிய நடிகர்கள் கிடைக்காததால், அவர் மனதுக்குள் நல்ல படைப்புகளை வெளிக்கொணர முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
மனமாற்றத்திற்காக இயற்கை வேளாண்மைக்குள் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர், இன்று மரணமடைந்துவிட்டார் எனும் துயரச்செய்தி என்னால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இந்தப் பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஆனந்தின் மரணமும் ஒரு எண்ணிக்கையில் மறைந்துவிடக்கூடியது அல்ல. ஒளிப்பதிவு மாணவர்களிடத்தில் மறைந்த ஜீவாவும் ஆனந்தும் என்றும் பேசுபொருளாக மதிக்கக் கூடியவர்களாக நிலைத்துக்கொண்டே இருப்பார்கள்.” என்றார்.