சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” எனப் பேசியிருந்தார்.
இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், திரைப்பிரபலங்களும் இது குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அந்த வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு நிகழ்ச்சி தொடர்பாக பேட்டியளித்த நிலையில், அவரிடம் இது சம்பந்தமான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த லோகேஷ், "நான் தமிழ்நாடு என்று சொல்லத்தான் விரும்புவேன்" எனப் பதிலளித்தார்.
மேலும், வாரிசு படம் வெளியாவதால் தான் தளபதி 67 பட அப்டேட் சொல்லாமல் இருந்ததாகவும், இப்போது வாரிசு படம் வெளியாகிவிட்டதால் இன்னும் 10 நாட்களில் தளபதி 67 பட அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்றார். ரோகிணி திரையரங்கில் அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படக் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, "ரசிகர்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். சினிமாவுக்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. சந்தோஷமாக வந்து படம் பார்த்துவிட்டு நல்லபடியா திரும்பி வீட்டுக்குப் போனால் போதும் என நான் நினைக்கிறேன்" எனப் பதிலளித்தார்.