
வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் ‘வாடிவாசல்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறனின் விடுதலை மற்றும் விடுதலை பாகம் 2 படங்களினால் படப்பிடிப்பு தள்ளி போனது. இருப்பினும் படத்தின் அரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தை தாணு தயாரிக்க ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்துக்காக சூர்யா மாடுபிடி வீரர்களிடமிருந்து ஏறு தழுவலின் நுட்பங்களை பயின்ற காட்சிகள் கடந்த 2022ஆம் ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் லண்டனில் காளைகள் போல் ஒரு ரோபோவை உருவாக்கி வருவதாகவும் அமீர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் வெற்றிமாறன் முன்பு ஒரு பட விழாவில் கூறியிருந்தார். பின்பு படத்தின் பணிகள் தீவிரப்படுத்தியதை குறிக்கும் வகையில் சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை தாணு கடந்த தைப் பொங்கலை முன்னிட்டு எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து இப்படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து படத்தின் இசைப் பணிகள் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது இன்னொரு அப்டேட்டையும் தற்போது பகிர்ந்துள்ளார். வாடிவாசல் படத்தின் பாடல் ரெக்கார்டிங் இன்று ஆரம்பித்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது. சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
#Vaadivaasal song recording starts today … @theVcreations … #Vetrimaaran @Suriya_offl …— G.V.Prakash Kumar (@gvprakash) March 19, 2025