
நடிப்பு இயக்கம் என பயணித்து வரும் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கும் குபேரா, பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘இட்லி கடை’ என்றும் தலைப்பில் அவரே ஒரு படம் நடித்து இயக்கியும் வருகிறார். இதில் குபேரா படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக ‘இட்லி கடை’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அது தற்போது தள்ளி போவதாக கூறப்படுகிறது.
இப்படங்களைத் தவிர்த்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம் மற்றும் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். இந்த லிஸ்டில் உள்ள விக்னேஷ் ராஜா படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷுக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதா தகவல் கூறப்படுகிறது. இவர் ‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். பின்பு தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘ரெபல்’ படம் மூலம் அறிமுகமானார். இப்போது விஜய் - வினோத் கூட்டணியில் உருவாகும் ஜனநாயகன், விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணியில் உருவாகும் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.