இயக்குனர் விஜய்யின் அடுத்த படமான, 'தளபதி 65' படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 'சுறா' மற்றும் 'சர்க்கார்' படத்திற்குப் பிறகு, விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
விஜய்யின் முந்தைய படங்களான 'கத்தி', 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு இசையமைத்த அனிருத், மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளது விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. 'கோலமாவு கோகிலா' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'டாக்டர்' திரைப்படத்தை இயக்கினார். அப்படம் வெளியீட்டிற்காகத் தயாராகவுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.