சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கையில் எஸ்.ஜே.சூர்யா பெற்றுக் கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் அவர் படம் இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “ஜனவரியில் தொடங்க இருக்கிறேன். நியூ 2 மாதிரியான ஒரு படம். கில்லர் என்ற டைட்டிலில் உருவாகும். கேம் சேஞ்சர் படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் படத்தின் அறிவிப்பு வரும்” என்றார்.
முன்னதாக கில்லர் படம் குறித்து தகவல் வெளியான நிலையில் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்து இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் படத்திற்காக ஒரு சொகுசு காரை ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எஸ்.ஜே. சூர்யா இறக்குமதி செய்துள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில், கில்லர் என்ற தலைப்பையும் படத்துக்காக அந்த சொகுசு கார் வாங்கப்பட்டதாகவும் எஸ்.ஜே.சூர்யா உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜே.சூர்யா, இப்போது ஷங்கர் - ராம் சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர், ஷங்கர் - கமலின் இந்தியன் 3, விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’, விக்ரம் - அருண்குமாரின் ‘வீர தீர சூரன்’, கார்த்தி - பி.எஸ்.மித்ரனின் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.