தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு சற்று உடல்நலம் தேறி தற்போது பழையபடி மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். அதன்படி தற்போது விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் வருண் தவான் நடிப்பில் உருவாகும் 'சிட்டடேல்' வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே இருந்து வருகிறது. இப்படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகி தற்போது வரை ரூ.10 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சமந்தாவின் கரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "சமந்தா விவாகரத்துக்குப் பிறகு புஷ்பா படத்தில் ஊ அண்டாவா... என்ற பாடலுக்கு நடனமாடினார். வாழ்வாதாரத்திற்காக அதை அவர் செய்தார். ஸ்டார் ஹீரோயின் என்ற அந்தஸ்தை இழந்த பிறகு தனக்கு வரும் அனைத்து வாய்ப்புகளிலும் நடித்து வருகிறார். கதாநாயகியாக அவரது கரியர் முடிந்துவிட்டதால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு வர முடியாது. அவருக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்தி தொடர்வார்.
யசோதா பட ப்ரமோஷன்களின் போது கண்கலங்கி படத்தை வெற்றிப்படமாக்க முயற்சித்தார். அதையே இப்போது சாகுந்தலம் படத்திற்கும் செய்கிறார். எல்லா நேரமும் அந்த செண்டிமெண்ட் எடுபடாது. கதாபாத்திரம் நன்றாக இருந்து படம் நல்லாயிருந்தால் மக்கள் வந்து பார்ப்பார்கள். இவை அனைத்தும் மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள். கதாநாயகி அந்தஸ்தை இழந்த சமந்தா, சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு எப்படிப் பொருந்தினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.