கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாக கூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க அரசு அனுமதியளித்து விட்டது. மேலும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கும் சில நிபந்தனைகளுடன் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது இவ்விரு அரசுகளும். இதனால் தெலுங்குத் திரையுலகில் எப்போது பணிகள் தொடங்குவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சிரஞ்சீவி வீட்டில் இன்று நடைபெற்றது. இதில் முன்னணி தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, இயக்குநர்கள் ராஜமெளலி, த்ரிவிக்ரம், கொரட்டலா சிவா உள்ளிட்டோருடன் தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாச யாதவும் கலந்து கொண்டார். இதில் அனைவரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
இறுதியாக இறுதிக்கட்டப் பணிகளை நாளை (மே 22) முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (மே 21) மாலை வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தெலுங்குத் திரையுலகினர் ஒன்றிணைந்து எப்போது தொடங்கலாம், எப்படி தொடங்கலாம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றைக்கேட்டுள்ளது தெலங்கானா அரசு.