விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் இந்த அறிக்கை தொடர்பாக தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக தங்களது கருத்தைப் பகிர்ந்திருந்தார்கள்.
இந்நிலையில், இந்தச் சிக்கல் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க மாதாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, "தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பதை திரும்பப் பெற வேண்டும். மொழி எல்லைகளைக் கடந்த ஒரு கலை தான் சினிமா. இதனை ஒரு மாநிலத்திற்கானது எனக் கருதி மொழிப்பிரச்சனையாக பிரித்திட வேண்டாம் என அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கிறோம்.
இந்தச் சிக்கல் தொடர்பாக நாங்கள் விரிவாகப் பேசியுள்ளோம். இது சம்பந்தமாக அவர்கள் கூறியதைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லியுள்ளார்கள். மேலும், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். எங்களையும் இது போன்று தீர்மானத்தை எடுக்க வைத்துவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்ப முடிவெடுத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அவர்கள் எங்களிடம் பேசியதை வைத்து பார்க்கையில் வாரிசு படத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது. தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து சிக்கல் இல்லாமல் ரிலீசாகும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்" எனப் பேசினார்.