விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கட்சியின் முதல் கூட்டமாக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்துள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு தலைமை தாங்கியுள்ள இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றதை அடுத்து, கட்சியின் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து சில முக்கிய முடிவுகளுக்கு செயற்குழு உறுப்பினர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.