இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதாக இருப்பது 'தாதா சாகேப் பால்கே' விருது. இந்த விருதினை இயக்குனர் பாரதிராஜாவுக்கு மத்திய அரசாங்கம் அளிக்க வேண்டும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழ்த் திரையுலகில் தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என அனைவரும் சேர்ந்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இக்கடிதத்தில் இந்திய சினிமாவிற்கு பாரதிராஜா செய்த தொண்டுகள் என்று சிலவற்றை குறிப்பிட்டுள்ளனர். பாரதிராஜாவின் 78ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நாளில் அவருடைய சினிமா பயணத்தைக் கருத்தில்கொண்டு, 2020ஆம் ஆண்டிற்கான ‘தாதா சாகேப் பால்கே’ என்னும் இந்திய சினிமாவின் உயரிய விருதினை அளிக்க வேண்டும் என்று தேசிய விருது பெற்ற 33 பேர் பரிந்துரை செய்துள்ளனர்.
பரிந்துரை செய்யப்பட்டவர்களில், கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டிற்கான இந்த விருதினை நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். இதுவரை தமிழ் சினிமாவில் 1996ஆம் ஆண்டு சிவாஜி கணேசனும், 2010ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தரும் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.