நடிகர் எஸ்.வி.சேகர் தமிழக அரசியல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல நிகழ்வுகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்த அவர், விஜய்யின் அரசியல் குறித்து மாநாட்டுக்கு வந்த கூட்டம் ஓட்டாக மாறாது என்றார். அவர் பேசியதாவது, “2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும். தி.மு.க. அரசு பல நல்ல விஷயங்கள் செய்து கொண்டு இருக்கிறது. பெண்களுக்கு இலவச பயணம், மாதம் மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், ஆண்மகனுக்கு ஆயிரம் ரூபாய் என ஒன்றரை கோடி ஓட்டுகள் அவர்களுக்கு இருக்கிறது. அது போக தேர்தலுக்கு இன்னும் ஒன்றை வருஷம் இருக்கிறது. இப்போது விஜய் வந்துவிட்டதனால் எதுவும் மாறப்போவதில்லை. அவருக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. அந்த கூட்டத்தை ஓட்டாக மாற்ற வேண்டியது விஜய்யின் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது.
காமராஜர் தேர்தலில் நிற்கும் போது, மெரினாவில் சோ பேசிய போது, ஒரு லட்சம் பேர் கூட்டம். அந்த தேர்தலில் தான் காமராஜர் மிகப் பெரிய தோல்வியை ஒரு கல்லூரி மாணவரிடம் தழுவினார். அதனால் கூட்டத்துக்கும் ஓட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. தமிழ்நாட்டில் தேர்தல் வந்தால் அது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மட்டும்தான். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் பக்கத்தில் வேண்டுமானால் விளையாடிக் கொண்டிருக்கலாம். விஜய்க்கு வயது இருக்கிறது. அவரால் இன்னும் 7 தேர்தலை எதிர்கொள்ள முடியும். அதற்குள் மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.
இன்றைக்கு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார் என்றால் மூன்று முறை அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இப்போதும் பல ஊர்களுக்கு போகிறார். கட்சியை வளர்க்கிறார். அதே போல் மன உறுதி இருந்தால் பண்ணலாம்” என்றார்.