பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஹ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், தொழில்முறை நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில், பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் யாஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பு நிறுவனத்திடமும் மும்பை போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பன்சாலி, தான் இயக்கிய ‘ராம்லீலா’, ‘பாஜிராவ் மஸ்தானி’ ஆகிய படங்களுக்காக முதலில் சுஷாந்தை அணுகியதாகவும், தேதி ஒத்துவராததால் அந்த இரண்டு படங்களின் வாய்ப்பும் ரன்வீருக்குச் சென்றதாகவும் மும்பை போலீஸாரிடம் கூறியிருந்தார்.மேலும்,‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் நடிப்பதற்காக சுஷாந்தை அனுமதிக்குமாறு யாஷ் ராஜ் நிறுவனத்தை 2015ஆம் ஆண்டில் அணுகியதாக பன்சாலி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுசாந்த் சிங் ராஜ்புத் யாஷ் ராஜ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பாணி படத்தில் நடித்துகொண்டிருந்தார். இதை ஷேகர் கபூர் இயக்கினார்.
யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஆதித்யா சோப்ராவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் சுஷாந்தை நடிக்க அனுமதிக்கக் கோரி தங்களை பன்ஸாலி அணுகவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘எம்.எஸ் தோனி’ படத்தில் அவரை நடிக்க அனுமதியளித்தோம் என்றும் ஆதித்யா சோப்ரா கூறியுள்ளார்.
இருவரும் வெவ்வேறு தகவல்களைத் தெரிவிப்பதால் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.