'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து பிரபலமானார். இதில் இவரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாயுடனான கூட்டணியில் உருவான 'நான் மகான் அல்ல', 'ஆதலால் காதல் செய்வீர்' படங்கள் ரசிகர்களிடம் நல்ல பெயர்பெற்றன. இந்நிலையில் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த இவர்கள் 'ஜீனியஸ்' என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கவிஞர் வைரமுத்து வரிகளில் 'விஜய் சூப்பர் சிங்கர்' இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவானது. சிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் 'ஜீனியஸ்' படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இப்படத்தை சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டெம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.