இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினாலும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் 'ஜெய் பீம்' படத்திற்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஜெய் பீம் படத்தைத் தயாரித்த சூர்யா, ஜோதிகா இருவருக்கும் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பைக் கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.
இதில் 'ஜெய் பீம்' படத்தை தயாரித்ததற்காக சூர்யா, ஜோதிகா இருவருக்கும் 2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க விருது வழங்கப்படவுள்ளது. இதேபோல நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விழா அடுத்த மாதம் 19ஆம் தேதி அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.