'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டு படங்களை தந்த கூட்டணி, கௌதம் மேனன் - சூர்யா கூட்டணி. கௌதம் மேனனும் சூர்யாவும் மூன்றாவது முறையாக 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைவதாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்பு துருவ நட்சத்திரம் படத்தை, விக்ரமை வைத்து இயக்கினார் கௌதம் மேனன். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
சூர்யா-கௌதம் மேனன் மீண்டும் இணைவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சமீபத்தில் கெளதம் மேனன், சூர்யாவுக்காக கதை ஒன்றை எழுதி வருவதாகவும், அது இரண்டு இசையமைப்பாளர்களின் இடையேயான காதல் பற்றிய கதை எனவும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சூர்யா-கெளதம் மேனன் இணையும் படம் பற்றி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா, வெற்றிமாறன், பாண்டிராஜ் என வேறு இயக்குநர்களோடு இணைவதாக அறிவிப்புகள் வெளிவந்தன. இதனால் சூர்யா- கௌதம் மேனன் இணைவது தாமதமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மணிரத்தினம் தயாரிக்கும் 'நவரசா' அந்தாலஜியில், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடிக்க, கௌதம் மேனன், கே.வி. ஆனந்த் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த இயக்குனர், எந்த கதாநாயகனை இயக்குவார் என அறிவிக்கப்படவில்லை. இதிலாவது சூர்யாவும்- கௌதம் மேனனும் இணைவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கௌதம் மேனன் இயக்கத்தில், 'நவரசா' அந்தாலஜியில் நடிப்பதை சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.