Skip to main content

''மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை'' - ஜோதிகா கருத்தை எதிர்த்தவர்களுக்கு சூர்யா பதில்!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020
fsf

 

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. அதை நன்கு பராமரித்து வருகிறார்கள். அதேபோல் பல்வேறு கோயில்களுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள், வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.  தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று நடிகை ஜோதிகா கூறினார். ஜோதிகாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், சில தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் ஜோதிகாவின் கருத்து குறித்து அவரது கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''அன்பை விதைப்போம்

 

அனைவருக்கும் வணக்கம்,

 

''மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமும் மாறியிருக்கிறது. கோவில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்ல சிந்தனைகளை படிக்காத காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. 

பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கரோனா காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மீக பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரைகுறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதிலளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையை கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். 

 

அன்புடன் 
சூர்யா                       என குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்