மக்களவை தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி. இப்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக இருந்து வருகிறார். இருப்பினும் ஒட்டக்கொம்பன் படத்தில் நடிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அமித்ஷா அந்த கடிதத்தை தூக்கி எறிந்ததாக அவரே ஒரு நிகழ்வில் கூறியிருந்தார்.
இதனால் ஒட்டக்கொம்பன் படத்திற்காக பல மாதங்கள் தான் வளர்த்து வந்த தாடியை கடந்த மாதம் ஷேவ் பண்ணியிருந்தார். ஒட்டக்கொம்பன் படத்தை தவிர்த்து இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் கோபி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் வருகிற 29ஆம் தேதி நடக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதில் நடிக்க சுரேஷ் கோபிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. பின்பு ஷங்கரின் ஐ, விஜய் ஆண்டனியின் தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.