பாலிவுட்டில் பல படங்களில் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி புகழ் பெற்றவர் நடிகை சன்னி லியோன். நடிப்பது மட்டுமில்லாமல் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட சன்னி லியோன், இந்நிகழ்ச்சிக்காக 20 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை. அதனால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘ஒப்புக்கொண்ட படி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் பேரில் கேரள மாநிலக் குற்றப்பிரிவு போலீசார் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் சன்னி லியோன். அந்த மனுவில், ‘எந்த குற்றத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. இந்த வழக்கால் நாங்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு கடந்த வருடம் நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது 2 வாரங்களுக்கு சன்னி லியோன் மீது எந்த விதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என விசாரணைக்கு தடை விதித்து குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில், கிரிமினல் குற்றம் என்ன இருக்கிறது என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சன்னி லியோன் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவதாகவும் இந்த வழக்கில் கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளது. மேலும் அடுத்த கட்ட விசாரணையை வரும் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.