தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விராட பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு இறங்கியுள்ளன. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளின் படுகொலையையும், பசு காவலர்களின் செயலையும் ஒப்பிட்டுப் பேசி நடிகை சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஜ்ரங் தள உறுப்பினர் அகில் என்பவர் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.