வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பில் சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் 'மாநாடு'. இவர் இதற்கு முன்னர் 'கங்காரு', 'மிக மிக அவசரம்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இதில் மிக மிக அவசரம் படத்தை இயக்கியதும் சுரேஷ் காமாட்சிதான். ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படமாக 'மாநாடு' இருப்பதால், இவரை நேரில் சந்தித்து அதனைப் பற்றிய தகவல்களையும், முக்கியமான அப்டேட்களையும் கேட்டு அறிந்தோம். அவர் நக்கீரனிடம் பகிர்ந்த எக்ஸ்க்லூசிவ் விஷயங்களைக் காணலாம்...
நீங்கள் தொடர்ந்து அரசியல், சமூகம் சார்ந்த வலிமையான கருத்துகளை வெளியிட்டு வருகிறீர்கள். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கியது பற்றி உங்கள் கருத்து?
ஜனநாயக நாட்டில் ஒருவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர்களின் பொதுச் சுதந்திரம். அதை நாம் விமர்சிக்கத் தேவையில்லை. தமிழகத்தில் அவர் மக்களால் மதிக்கப்படுகிற மிகப்பெரிய நடிகர். ஆனால், அரசியலில் நுழைந்தவுடன் அவரைப்பற்றி பலரும் பல விமர்சனங்களைக் கூறலாம், அவரை சிலர் இயக்குகிறார்கள் எனவும் கூறலாம். ஆனால், முதலில் அது ரஜினியின் தனிப்பட்ட விஷயம். 'என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு என்னால் முடிந்தவரை ஏதாவது செய்தே ஆகவேண்டும். ஆனால், எனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை' என வெளிப்படையாய் ஒருவர் கூறுகின்றார் என்றால் அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் நாம் மனிதர்களே இல்லை.
ஆரம்பத்தில் இருந்தே ‘மாநாடு’ படம் சர்ச்சைகளிலேயே இருந்தது உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கியதா?
பொதுவாகவே நான் நடிகர் சிம்புவுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய நாளில் இருந்தே பலர் என்னைத் தொடர்புகொண்டு சில விஷயங்களை செய்யாதீர்கள் எனக் கூறினார்கள். ஆனால் நான் முடியாததை எல்லாம் முடித்துக் காட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதற்குள் எனக்கும் சிம்புவுக்கும் பல மனஸ்தாபங்கள். அவர் நடிக்கமாட்டேன் என்று கூறியபோது கூட எனக்கு அவர் மீது ‘தம்பி’ என்கிற மரியாதை குறையாமல்தான் இருந்தேன். படம் கைவிடப்படுகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்ட அந்த சமயத்தில் கூட நானும் சிம்புவும் தினமும் ஃபோனில் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அவரிடம் பிடித்த ஒரு குணாதிசயம் என்னவென்றால், யாரையும் பழிவாங்குகிற எண்ணமோ, பின்னால் சென்று நம்மை விமர்சிப்பதையோ செய்யமாட்டார். உங்களுக்கு ஒரு விசயம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள். ‘அஅஅ’ படம் வெளியானபோது ‘சிம்புவ கூட்டி வர சொன்னா, ராஜ்கிரனை கூட்டி வந்திருக்காங்க’ என்று கடுமையாக விமர்சித்தவர் ப்ளூ சட்டை மாறன். என் தயாரிப்பில் அவர் படம் இயக்க முடிவான போது, அவரை முதன்முதலில் வாழ்த்தியது சிம்புதான். என்னிடம் ஃபோன் போடச் சொல்லி அவரிடம் பேசி வாழ்த்தினார். யாருக்காவது இந்த மனசு வருமா? அதுதான் சிம்பு. இப்படி ரெண்டு பேருக்கும் இருந்த பரஸ்பர அன்பும் மரியாதையும்தான் ‘மாநாடு’ மீண்டும் தொடங்கியது.
'மாநாடு' உங்களுக்கு முழு திருப்தியாக இருந்ததா?
தயாரிப்பாளர்கள் யாருமே அவர்கள் படத்தைக் குறையாகக் கூறமாட்டார்கள், அதைப்போன்றே நானும். ஆனால் மற்றவர்களைப் போல் மேடைமேடையாய் ஏறி படத்தை எடுத்துக்கூற எனக்குப் பிடிக்காது. அதைப்போன்று இந்தப் படத்தில் எனக்கு அமைந்த படக்குழுவைப் பார்த்ததும் முழு நம்பிக்கையும் திருப்தியும் ஏற்பட்டுவிட்டது. 'சிம்பு - வெங்கட் பிரபு' கூட்டணி ரசிகர்களிடையே பெரிதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனால், இது சிம்புவிற்கு சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல படமாக அமையும் என்று நம்புகிறேன்.
அரசியல் படமாக ‘மாநாட்டை’ பார்க்கலாமா?
ஜாதி, மதத்தை அரசியலுக்காக உபயோகிப்பதை, இப்போது நாம் தமிழ்நாட்டில் அதிகமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது மிகத் தவறான செயல் என நான் நினைக்கிறேன். இசுலாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமயத்தில், ஒரு மதத்தை வைத்தோ அல்லது ஜாதியை வைத்தோ அரசியல் செய்வது என்பது, பிரிவை ஏற்படுத்துகிற வகையில் உள்ளது. இப்போது என் உடன்பிறந்த அண்ணன் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து சென்றால் அவரை எனது அண்ணன் இல்லை எனக் கூற முடியுமா? அவருக்குப் பிடித்த ஒன்றை செய்கிறார். அதனால் அவரை தமிழ் இனத்தவர் இல்லை எனச் சொல்ல முடியாது. மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்பதே எங்களது எண்ணம் அதை தழுவிய படமே 'மாநாடு' .
ஆரம்பத்தில் இருந்தே சிம்பு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவைப் பற்றி?
கண்டிப்பாக, அது ஒரு முக்கியமான உத்வேகமாக எனக்கு எப்போதும் இருக்கிறது. காரணம், அவருடைய படத்தைப் பற்றிய ஒவ்வொரு தகவல்களையும், சிலர் சமூக வலைதளங்களில் கொண்டு சேர்க்கின்ற விதத்தைப் பார்த்து வியக்கிறேன். ஆனால், சில சமயங்களில் முகம் சுளிக்கின்ற வகையில் தேவையில்லாத கருத்துகளை வெளியிடுவதை முற்றிலுமாய் தவிர்க்க விரும்புகிறேன். சமூக ஊடகங்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அந்த ரசிகர்களை அவர்கள் சார்ந்து இருக்கும் நடிகர்களே வழிநடத்த வேண்டும் என நினைக்கிறேன். அதை மிக முக்கியமாகச் செய்ய வேண்டும். ஏனென்றால் ரசிகர்கள் இல்லையேல் எந்த நடிகர்களும் இல்லை என்பதே நிதர்சனம். ரசிகர்கள், சினிமாவிலேயே நேரத்தை செலவிடாமல் தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது அரசியல் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். அரசியல் என்றாலே சாக்கடை என்று ஒதுக்காமல், அதிலும் நமது கடமை என எண்ணி தலையிட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். நடிகர்கள், தங்களது ரசிகர்களை சரியாக வழிநடத்துவதன் மூலம், ஒரு வேளை பிற்காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் பண்பட்ட தொண்டர்களாக ரசிகர்கள் அமைவார்கள்.
விமர்சனங்கள் படத்தின் வெற்றியைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?
பொதுவாகவே இன்றைய மீடியா உலகில் விமர்சனங்கள் கூறுவதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு நல்ல முறையில் விமர்சனங்களை வெளியிட்டால் அது ஆரோக்கியமாக இருக்கும் என்பது எல்லோரும் விரும்பும் உண்மை. அதைப் போன்று தற்போதைய சூழலில் பலரும் பல பிரபலங்களின் பொது வாழ்க்கையைப் பற்றி தவறாகப் பேசுவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நான் என் வேலையைச் சரியாகச் செய்யவில்லை எனக் குறை கூறினால் அது என் எதிர்காலத்திற்கு வளமாக இருக்கலாம். ஆனால், என் தனிப்பட்டவாழ்க்கை அது என்னைச் சார்ந்தது மட்டுமே, நிச்சயமாகப் பிறர் தலையிடக் கூடாத ஒன்று.
படத்தைப் பற்றிய முக்கிய அப்டேட்ஸ் ஏதும் இருக்கிறதா?
ஏற்கனவே படத்தைப் பற்றிய முழுத் தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர்த்து வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. படத்தில் யுவனின் இசை மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது. அதற்கு நாம் சான்று அளிக்கவும் தேவையில்லை. பின்னர் புதுவருடமன்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட ஆசைப்பட்டேன். ஆனால், இன்னும் வேலைகள் முழுவதுமாய் முடியாத காரணத்தினால் அது முடியவில்லை. இருந்த போதிலும் இந்த மாதம் முழுவதும் ‘மாநாடு’ பற்றிய அப்டேட்ஸ் வரும் என எதிர்பார்க்கலாம். படத்தை ரம்ஜான் பெருநாள் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.