Skip to main content

சொல்லாமல் சென்ற சிம்பு, சொல்லி விட்டு சென்ற விஜய் சேதுபதி... வட சென்னை வளர்ந்த கதை

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
vada chennai

 

வடசென்னை திரைப்படம் நாளை மறுநாள் வெளிவர இருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த படம் உருவானது குறித்த சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். 2003ம் ஆண்டு இந்த படத்தின் முதல் எண்ணம் உருவாகி விட்டது. 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் வெற்றிமாறன் உதவி இயக்குனராக பணியாற்றிய போது வடசென்னையை சேர்ந்த ஒருவர் இந்த கதையை அவரிடம் பகிர்ந்துள்ளார். அந்த சமயத்தில் தனுஷிடம் இந்தக் கதை பற்றி வெற்றிமாறன் பேசியுள்ளார். தனுஷும் பிற்காலத்தில் இந்த படத்தை அவர்களது முதல் படமாக உருவாக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் படத்தின் பட்ஜெட் நடிகர்கள் தேவை உட்பட பல காரணங்களால் இதை அவர்களது முதல் படமாக உருவாக்கவில்லை. பின் 'பொல்லாதவன்' வெற்றி பெற்ற பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என்று நினைத்து, பின் அது 'ஆடுகளம்' படமாக மாறியது. ஆடுகளத்திற்கு பின்னும் அதே போல் இந்த படம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. பின்னர் அதுவும் தள்ளிபோய் 'விசாரணை' படத்திற்கு பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என்று தனுஷும் வெற்றிமாறனும் முடிவு செய்தனர். 

 

 

 

 

vada chennai

 

அந்த நேரத்தில் கிளவுட் நைன் மூவிஸ் தயாநிதி அழகிரி இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது.  சில காரணங்களால் அதுவும் தள்ளிப் போக பின்னர் தனுஷ் பிஸியானார். இதனால் சிம்புவிடம் பேசினார் வெற்றிமாறன். சிம்புவும் ஓகே சொல்லி படத்தை ஆரம்பிக்கும் சமயத்தில், ஏதோ ஒரு காரணத்துக்காக அமெரிக்கா சென்ற சிம்பு அங்கு மூன்று மாதத்திற்கும் மேல் தங்க வேண்டியது இருந்தது. இதனால் படப்பிடிப்பு தள்ளிப் போக சிம்பு மீண்டும் எப்போது வருவார் என்பது தெரியாத நிலையில் மீண்டும் தனுஷை வைத்து வடசென்னை படம் தொடங்கப்பட்டது. இப்படி ஹீரோ பாத்திரத்திற்கு தனுஷ், சிம்பு என அவ்வப்போது மாறி மீண்டும் தனுஷ் என மாறியது போலவே அமீர் தற்போது நடித்திருக்கும் பாத்திரத்திற்கும் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இப்படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி 'வடசென்னை' படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார். ஆனால் திரும்பவும் அவர் ஃப்ரீயாக இருந்தபோது படம் தொடங்கவில்லை. பின்னர் படம் தொடங்கியபோது அவர் வேறு படங்களில் பிசியாகி விட்டதால் இந்தப் பாத்திரத்தில் நடிக்க வேறு சில நடிகர்களை அணுகிப்பார்த்து சரிவராததால் இறுதியாக அமீரிடம் சென்றார் வெற்றிமாறன்.

 

vada chennai

 

 

 

அமீரின் பாத்திரம் ஆரம்பத்தில் மிக சின்னதாக இருந்தது. படப்பிடிப்பு நடக்க நடக்க அது முக்கிய பாத்திரமாக வளர்ந்ததாம். இப்படி நடிகர்களின் மாற்றம் ஒரு பக்கம் என்றால், படத்திற்குள் பாத்திரங்களும் மாறி இருக்கின்றன. ஆரம்பத்தில் சமுத்திரக்கனி நடித்த இருந்த பாத்திரத்தில் கிஷோர் நடிப்பதாகவும், கிஷோர் நடித்துள்ள பாத்திரத்தில் சமுத்திரகனி நடிப்பதாகவும் இருந்தது. பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. மேலும் படம் தொடங்குவதற்கு முன் நடந்த டெஸ்ட் ஷூட்டில் இருந்த நடிகர்களில் ஆண்ட்ரியா மட்டுமே இப்போது நடித்துள்ளாராம். இப்படி பல மாற்றங்களுக்கு பின் 2016ஆம் ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு இந்த ஆண்டு வரை நடந்து நாளை மறுநாள் படம் வெளிவருகிறது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
 

 

சார்ந்த செய்திகள்