பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'.தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.ஆனால், தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வருட சங்கராந்தியை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் இரண்டு பெரிய நடிகர்களை இயக்கிய அனுபவம் குறித்து இயக்குனர் ராஜமெளலி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில்...
''இரண்டு நடிகர்களுக்குமே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.இது உங்கள் தோளின் மீது சுமத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய பொறுப்பாகத் தோன்றுகிறதா என்று பலர் என்னிடம் கேட்டார்கள்.நான் அதற்கு இல்லை,அதை நான் ஒரு சுமையாகப் பார்க்கவில்லை என்றேன். எனக்கு இது ஒரு எனர்ஜி பூஸ்டராகத்தான் பார்க்கிறேன். இரண்டு நடிகர்களுக்கும் ரசிகர்கள் என்பவர்கள் இருப்பார்கள், ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் சினிமாவை ரசிக்கக் கூடிய கோடிக்கணக்கான பொதுவான ரசிகர்களும் இருக்கிறார்கள். நடிகர்களின் ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும்தான் என்றாலும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மறந்துவிடக்கூடாது.நான் சிறுவயதில் காமிக்ஸ் படிக்கும்போது ஸ்பைடர்மேனும், சூப்பர்மேனும் இணைந்தால் எப்படி இருக்கும்.பீம் மற்றும் ஹனுமான் இணைந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன்.இரண்டு பெரிய ஆளுமைகள் இணைவது எப்போதும் நன்றாக இருக்கும்.ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவருமே தொழில்ரீதியாக எதிரெதிர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவருமே நல்ல நண்பர்கள்.எனக்கும் கூட இருவருமே நல்ல நண்பர்கள் தான்.எனவே ரசிகர்களின் மோதல்கள் இதனைப் பாதிக்காது" எனக் கூறியுள்ளார்.