அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. 7 வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்வில் கே.ஜி.எஃப். புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், “சீயான் விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அது ‘கோப்ரா’ படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இதற்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்பவும் கனிவாகவும் தாராள மனப்பான்மையோடும் விக்ரம் சார் இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் என்னை இயல்பாக இருக்க வைத்து, படப்பிடிப்பு முழுவதிலும் உற்சாகமாக பணியாற்ற வைத்ததில் விக்ரம் சாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. நான் தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் பணியாற்றிய, நடித்த அனைவருக்கும் நன்றி. ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் கோப்ரா படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்” எனத் தெரிவித்தார்.