குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வின், இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.
சமீபத்தில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய அஷ்வின், "நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கிவிடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை 'என்ன சொல்ல போகிறாய்'தான்” எனத் கூறியிருந்தார். இவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியதோடு, விவாதத்திற்கும் உள்ளானது.
இதையடுத்து நடிகர் அஷ்வினின் பேச்சுக்கு ஆதரவாக ‘கைதி’ பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வைப் புரட்டிப்போடும் தருணம் என்பதால், அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறு தவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் நடிகர் அஷ்வின், ‘யாரையும் புண்படுத்தும் வகையில் கூறவில்லை, எதார்த்தமாகத்தான் பேசினேன்’ என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு.பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!— SR Prabhu (@prabhu_sr) December 7, 2021