Skip to main content

8 மணி நேர வேலை என்பது எத்தனை பெரிய போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது தெரியுமா? - எஸ்.பி.ஜனநாதன் தகவல்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020
fhfh


உலகம் முழுவதும் (இன்று) மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மே தினம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... 


''மனித'மே' வெல்லும் 


உழைக்கும் வர்க்கத்தின் தியாகத்தையும் வலிமையையும் உணர்த்திய தினம் இந்த மே தினம். உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற காரல்மார்க்ஸ் அறைகூவல் விடுத்த காரணத்தினாலோ என்னவோ பலரும் இதை கம்யூனிஸ்ட் போராட்டம் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இது மக்களின் போராட்டம். உழைக்கும் வர்க்கம் வென்ற ஒரு தினம். இன்று நாம் கடைபிடிக்கும் 8 மணி நேர வேலை என்பது எத்தனை பெரிய போராட்டத்திற்கு பிறகு கிடைத்திருக்கிறது. இந்த தொழிலாளர் தினம் தோன்றிய தன் வரலாறு குறித்து ஒரு சிறு பார்வை இதோ...


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழ ஆரம்பித்தது. அமெரிக்காவில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அந்தத் தீப்பொறி தான் பின்னாட்களில் அமெரிக்காவையே உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.


1886 இல் நடந்த போராட்டம் ஒன்றில் 4 தொழிலாளர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினர். அந்த வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை கூட வழங்கப்பட்டது. சமீபத்தில்கூட அமெரிக்கா இஸ்ரேலுக்காக தன் மன்னிப்பு கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்.1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும் சிகாகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலை மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினமாக மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியும் சிங்காரவேலர் 1923 இல் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவை கொண்டாடினார்.

 

தொழிலாளரின் வாழ்க்கையில் ஒரு 'லாப'கரமான இந்த தினத்தை போற்றுவோம் என இயக்குனர் எஸ் பி ஜனநாதன்'' குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச்சிலை திறப்பு! (படங்கள்)

Published on 26/12/2021 | Edited on 26/12/2021

 

மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் முழு உருவச் சிலை மற்றும் படத்திறப்பு விழா அடையாற்றில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் எஸ்.பி.ஜனநாதனின் உருவப்படத்தை இந்திய விடுதலை போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு திறந்து வைத்து புகழ் வணக்க உரையாற்றினார்.  

 

அவரது முழு உருவச் சிலையை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காணொளி வாயிலாகத்  திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே,பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு சி.மகேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

 

 

Next Story

எஸ்.பி.ஜனநாதன் மறைவு... லாபம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

laabam

 

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லாபம்'. இப்படத்தை, விஜய் சேதுபதியுடன் இணைந்து 'சவன் சி என்டர்டெயின்ட்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், லாபம் படத்தின் நிலை குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபம் படத்திற்கான அனைத்துப் பணிகளையும் எஸ்.பி.ஜனநாதன் முடித்துக் கொடுத்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள ஒரு சில பணிகளை படக்குழுவினர் நிறைவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில்,  'படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்தில்  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.