காமெடி நாயகனாகப் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய நடிகர் சூரி, இப்போது கதையின் நாயகனாக 'விடுதலை' படத்தின் முதல் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். விடுதலை பட அனுபவங்கள் குறித்தும் திரையுலக அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் இப்போது மனம் திறக்கிறார்.
கதை நாயகனாக விடுதலை படத்தில் நடித்தாலும் தொடர்ந்து அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்கிற மனநிலையில் தான் நான் இருக்கிறேன். விடுதலை படத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் உழைப்பும், தயாரிப்பாளரின் ஒத்துழைப்பும் பிரம்மிப்பாக இருக்கிறது. அனைவரும் என்மேல் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இனி ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். என்னுடைய படத்துக்கு இளையராஜா சார் இசையமைக்கிறார் என்கிற செய்தியை அறிந்தவுடன் நெகிழ்ந்து போனேன்.
சங்கமம் படத்திலேயே ஒரு சீனில் நான் நடித்திருக்கிறேன். அவ்வளவு வருடம் சினிமாவில் கஷ்டப்பட்டு இருக்கிறேன். இப்போது விடுதலை படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். படத்தில் ரிஸ்கான ஒரு காட்சியில் நான் நடித்திருக்கிறேன். ட்ரெய்லர் வெளியான பிறகு அந்தக் காட்சி தொடர்பாகத்தான் எனக்கு பல அழைப்புகள் வருகின்றன. சிவகார்த்திகேயன் கூட அந்தக் காட்சிக்காக என்மேல் அன்பாகக் கோபித்துக் கொண்டார். ட்ரெய்லரை ரொம்பவும் பாராட்டினார். அந்தக் காட்சியை நாங்கள் பாதுகாப்புடன் தான் எடுத்தோம். ஆனால் அதன்பிறகு பல தையல்கள் போடும் அளவுக்கு அடிபட்டது. படத்தின் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும்.
ஒரு காட்சியில் கையில் துப்பாக்கியோடு நான் தொடர்ந்து ஓட வேண்டும். அந்தக் காட்சியில் காலில் ஆணி குத்தி பல காயங்கள் ஏற்பட்டன. என்னுடைய மண்டை தேங்காய் போல் உடைந்திருக்க வேண்டிய தருணங்கள் இருந்தன. ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினாலும், எனக்காக அத்தனை பேர் காத்திருப்பதை நினைத்து தொடர்ந்து நடித்தேன். இந்தப் படத்துக்கு அவ்வளவு உழைப்பு நிச்சயம் தகும். ஒட்டுமொத்த படக்குழுவும் அவ்வளவு உழைத்தது.
இந்தப் படத்திற்குப் பிறகு 'வாத்தியார்' என்றால் விஜய் சேதுபதி தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அவருடைய கேரக்டர் பேசும் வசனங்கள் ரசிகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். விடுதலை படப்பிடிப்பின் போது வடசென்னை 2 பற்றி வெற்றிமாறன் சார் நிறைய சொல்வார். வடசென்னை படத்தைவிட அதன் இரண்டாம் பாகம் இன்னும் மிரட்டலாக இருக்கும். அந்தப் படத்தில் வந்த கேரக்டர்கள் அடுத்த பாகத்தில் வேற லெவலில் இருக்கும். ஒரு ரசிகனாக அந்தப் படத்துக்காக நானும் காத்திருக்கிறேன்.
ஒரு கடைநிலைக் காவலாளியின் மனப்போராட்டங்களை விடுதலை படம் பிரதிபலிக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எதார்த்த வாழ்வியலை இந்தப் படம் வெளிப்படுத்தும். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நான் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படத்தையும் நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். என்னுடைய நடிப்பையும் அணுகுமுறையையும் எப்போதும் பாராட்டுபவர் சிவகார்த்திகேயன். கொட்டுக்காளி படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு ஒரு நாள் இரவு எனக்கு ஃபோன் செய்து அவ்வளவு பாராட்டினார்.
நியாயமான, சரியான விமர்சனங்களை எப்போதும் நான் ஏற்றுக்கொள்வேன். நான் இன்று இந்த இடத்தில் அமர்ந்திருப்பதற்கு முக்கியமான காரணம் என்னுடைய குடும்பத்தினரின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் தான். அவர்களால் தான் எனக்குப் பிடித்த சினிமா வேலையை நான் நிம்மதியாகச் செய்ய முடிகிறது. எவ்வளவு மனக் கஷ்டங்கள் வந்தாலும் அனைவரும் தங்களுடைய குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தை நாம் நன்றாக கவனித்துக் கொண்டால் அந்த இறைவன் நம்மை நன்றாக கவனித்துக் கொள்வான்.