இரண்டாவது இன்னிங்சில் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் எஸ்.ஜே சூர்யா தற்போது நடிகர் அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் எஸ்.ஜே சூர்யா சத்தமே இல்லாமல் மாயா, மாநகரம் போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'மான்ஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை 'ஒரு நாள் கூத்து' பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.