பாலிவுட்டில் நடிகையாக வலம் வருபவர் ஹினா கான். பஞ்சாபி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடந்த ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக தன்னை போலவே தனது காதலர் ராக்கியும் மொட்டை அடித்து கொண்டடு பல்வேறு விஷயங்களில் உதவியதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “எனக்குத் தெரிந்த சிறந்த மனிதர் ராக்கி. நான் மொட்டையடித்தபோது அவரும் மொட்டையடித்துக் கொண்டார். எனக்கு எப்போது முடி வளரத் தொடங்கியதோ அப்போதுதான் அவரும் முடி வளர்க்கத் தொடங்கினார். என்னை விட்டுக்கொடுக்க அவருக்கு நூறு காரணங்கள் இருந்த போதிலும் எப்போது என் பக்கம் இருந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் பல கடினமான சூழ்நிலையிலும் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம். கரோனோ காலகட்டத்தில் கடுமையான சவால்களை சந்தித்தோம். அந்த சமயத்தில் நாங்கள் இருவருமே எங்களின் தந்தையை இழந்தோம்.
புற்றுநோய்க்கு நான் சிகிச்சை பெறத் தொடங்கியதில் இருந்து இப்போது வரை அவர் எனக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். என்னை குளிப்பாட்டுவதில் இருந்து தொடங்கி என் ஆடை மாற்றுவது வரை அனைத்தையும் அவர் எனக்கு செய்தார். இந்த பயணம் குறிப்பாக கடந்த இரண்டு மாதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. நான் ராக்கியை எப்போதாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன். நாங்கள் இருவரும் முன்பு போலவே இந்த தருணத்திலும் சிரிக்கிறோம், அழுகிறோம் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம். அதையே தான் இனிவரும் காலங்களிலும் தொடர்வோம். இவரை போன்ற ஒரு ஆண் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் வர வேண்டும் என நான் விரும்புகிறேன்” என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.