விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்று நடித்ததால் 'வடிவேல் பாலாஜி' என புகழ் பெற்றவர்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உடல் மொழியுடன் தனது உடல் மொழியையும் கலந்து மக்களை மகிழ்வித்து வந்தவர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த பாலாஜி நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடிய நிலையில், சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து காமெடி நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளையும், உடல் மொழிகளையும் வெளிப்படுத்தி சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்து வந்தார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி. பொருளாதார பிரச்சனை காரணமாக அங்கிருந்து வேறு ஒரு சிறிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதன்பின், வீட்டுக்கு வந்த அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இந்நிலையில், 9ஆம் தேதி நள்ளிரவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்துடிப்பு சீராக இல்லாததால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இந்நிலையில் நேற்று வடிவேல் பாலாஜி (வயது 42) உயிரிழந்தார். வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அது இது எது என்னும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் வடிவேல் பாலாஜி இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.