![sivakarthiekayn](http://image.nakkheeran.in/cdn/farfuture/HVZYDdzfXYZ4kN9TNJDGevjf0n-j1MrrgRUNcr6gtwI/1605868151/sites/default/files/inline-images/sivakarthikeyan_20.jpg)
மிமிக்ரி கலைஞர், டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர், டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து உதவி வருகிறார். அது மட்டுமல்லாது இயற்கைப் பேரிடர் சமயம், கரோனா அச்சுறுத்தல் சமயம் என்று மக்கள் கஷ்டங்களை துடைக்க தன்னால் முடிந்த நிதியுதவியையும் சேவையையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில், யாரின் ஆதரவும் இல்லாத நிலையில், பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாணவி பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தான் விரும்பிய மருத்துவப் படிப்பை பயில முடியாமல் சிரமத்திற்கு ஆளானர்.
அந்த மாணவியை, இந்தாண்டு தனது செலவில் நீட் கோச்சிங் பெற வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில், இந்த வருட நீட் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பை படிக்க இருக்கிறார். இந்தத் தகவலை புதுமுக இயக்குனர் இரா.சரவணன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பலரும் சிவாவின் இந்தச் செயலுக்குத் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.