ரஜினிகாந்த், விஜய் வரிசையில் குழந்தை ரசிகர்களை அதிகமாக கொண்டவராக மாறி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்களை பார்க்கும் குழந்தைகள் இவரை நடிகர் என்று மட்டும் பாராமல் அதையும் தாண்டி தங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசிக்கிறார்கள். இதனாலேயே இவருக்கு குழந்தைகள் ரசிகர் பட்டாளம் ஏராளம். குழந்தைகளின் இந்த கள்ளம், கபடமற்ற அன்புக்கு கைமாறாக, குழந்தைகளை மோசமாக பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் ஊக்கப்படுத்த மாட்டேன் என ஒரு விழாவில் உறுதி அளித்த சிவா தற்போது இன்னும் ஒரு படி மேலே போய், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.
சிசெல்அமைப்பின் நிறுவனர் அரசி அருள் மற்றும் பீஸ் என்.ஜி.ஒ அமைப்பின் நிறுவனர் ராகிணி முரளிதரன் ஆகியோர் திருமதி ஆர்த்தி ஆகியோரின் வலியுறுத்தலின் பேரில் இதில் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன் இதுகுறித்து பேசும்போது..."ஒரு நடிகன் மற்றும் அப்பாவாக எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த முயற்சியில் நானும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன்" என்றார். இந்த வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. இது குழந்தைகள் மீதான தொடுதலில் உள்ள வகைகள், உடல் பாகங்கள், பாதுகாப்பு எல்லைகள், யாரை நம்ப வேண்டும் போன்ற முக்கியமான தலைப்புகளை பற்றி மென்மையான முறையில் பேசுகிறது. இந்த விழிப்புணர்வு வீடியோவை திரையரங்குகளில் ஒளிபரப்பவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த சமூக விழிப்புணர்வு வீடியோவை சாம் சிஎஸ் இசையில், ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் இயக்குனர் திரு இயக்கியிருக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு இந்த ஆவண படம் சிவகார்திகேயன் வெளியிடுகிறார்.