சில பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இந்தப் பாடலைப் பாடிய பாடகி யாராக இருக்கும் என யோசிப்போம். திடீரென கூகுளில் தேடுவோம். இவங்கதான் அந்தப் பாடலை பாடினார்களா என்று ஆச்சரியமாகக் கூட இருக்கும். அப்படியான நாம் கேட்டு வியந்த பல பாடல்களைப் பாடிய பாடகி பிரியா பிரகாஷ் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்.
பிரியா பிரகாஷ் பேசியதாவது “வாழ்க்கையில் நாம் பொறுமையாக இருந்தால் நமக்கு வர வேண்டிய அங்கீகாரம் நிச்சயம் வந்து சேரும் என்பதற்கு நானே ஒரு உதாரணம். அனைத்து வகையான குரல்களிலும் பாடியிருக்கிறேன். புது முயற்சிகள் செய்வதற்கு என்னுடைய குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம் மிக முக்கியமானது. மேஜிக் மேஜிக் என்கிற 3D படத்தில் குட்டிச்சாத்தான் குரலிலும், சாதாரண குரலிலும் வேறுபாடு காட்டி நானே பாடினேன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கோரஸ் பாடியுள்ளேன்”.
ஒவ்வொருவர் சொல்லும் வித்தியாசமான வார்த்தைகளையும் ஒன்றாகக் கோர்த்து பாடலில் சரியான இடங்களில் சேர்த்து விடுவார் ஹாரிஸ் ஜெயராஜ் சார். பத்ரி படத்தில் 'சலாம் மகாராசா' பாடல் பாடினேன். பாடி முடித்த பிறகுதான் அது விஜய் அண்ணாவின் படத்திற்கான பாடல் என்பதே தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருமுறை கனடாவில் முழுக்க முழுக்க விஜய்யின் பாடல்களை மையப்படுத்திய 'விஜய் நைட்' என்கிற நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நானும் கனடா சென்றேன். அவருடைய நண்பர்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.
அப்படி ஒரு நிகழ்ச்சியை விஜய்க்காக நடத்தியது அந்த ஒருமுறை மட்டும்தான் என்று நினைக்கிறேன். அங்கு விஜய் பல பாடல்களைப் பாடினார். மேடையில் ஆடினார். அப்போதே அங்கு ரசிகர்களிடம் அவருக்கு அவ்வளவு கிரேஸ். மொத்தம் இரண்டு ஷோக்கள் நடந்தன. அப்போது ஷோபா அம்மா என்னை அவ்வளவு அன்பாக கவனித்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியை என்னுடைய வாழ்வில் மறக்கவே முடியாது. அப்போதே விஜய் அவ்வளவாகப் பேச மாட்டார். சரவணன் மீனாட்சி தொடரின் ஆரம்பப் பாடலை நான்தான் பாடினேன்.
நான் பாடிய பல பாடல்களை, நான்தான் பாடினேன் என்பதே பலருக்குத் தெரியாது. தெரிந்த பிறகு ஆச்சரியமாகக் கேட்பார்கள். தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்குப் பிறகு தான் என்னைப் பற்றிப் பலருக்கும் தெரிகிறது. என்னுடைய வேலைகளை நான் தொடர்ந்து சரியாகச் செய்துகொண்டே இருந்தேன். அதற்கான அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளது. இசையுலகில் சாதிக்க வயது என்பது ஒரு தடையே கிடையாது. அதற்கு நானே சாட்சி.