லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் லியோ. லலித் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் போதைப்பொருள், வன்முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பதாக கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த ராஜமுருகன், உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “லியோ படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதோடு ஆயுத கலாச்சாரம் காட்டப்பட்டுள்ளது. மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி, முரண்பாடான கருத்துகளை முன்வைக்கிறது. அதன் தொடர்பான எதிரிகளை பழிவாங்குவதற்கு பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும் என இளம் சிறார்களை பாதிக்கக்கூடிய காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார்.
மேலும் சட்ட விரோத செயல்கள், போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், அதிகாரத்தை அச்சுறுத்துவது, காவல் துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என சமூக விரோதமான கருத்துக்களை தனது திரைப்படங்களில் காண்பித்திருக்கிறார். இது தொடர்பாக லியோ படக்குழு மீது வழக்கு பதிவு செய்து, லியோ படத்தை எந்த தளத்திலும் திரையிடாதவாறு தடை விதிக்க வேண்டும். அத்தோடு வன்முறை காட்சிகளை படமாக்கி அதை திரைப்படமாக்கியதால், அவருக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் விளம்பர நோக்கோடு தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறி மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.