ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கந்தாரா தி லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் முன்னதாக வெளியானது. கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹெரூர் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வெடிபொருட்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக புகார் எழுந்தது. இது குறித்து பேசிய கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, “படக்குழுவுக்கு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஏதேனும் ஒன்றை மீறினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மோதலில் அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எசலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ் நடித்து வரும் டாக்சிக் படக்குழு படப்பிடிப்பிற்காகப் பெங்களூருவில் செட் அமைப்பதற்கு வனப்பகுதியில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக புகார்கள் எழ படத்தின் தயாரிப்பாளர் மீது கர்நாடகா வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.