மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் பலரது பாராட்டை பெற்றார்.
திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்து வந்தாலும் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். பொதுவெளியில் இவரது செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளது. மீடூ விவகாரத்தில் சர்ச்சையான கருத்து தெரிவித்தது முதல் சமீபத்தில் ஒரு கடையில் சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டது வரை நிறைய சர்ச்சையான விஷயங்கள் இதில் அடங்கும். குறிப்பாக அவர் மது போதையில் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். கொச்சியில் உள்ள அவரது வீட்டில் பால்கனியில் நின்று கொண்டு தான் அணிந்திருந்த வேட்டியை திடீரென அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விநாயகன் யாரையோ திட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உள்ளாக விநாயகன் தனது ஃபேஸ் புக் பக்கம் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார்.