கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கடந்த 18 ஆம் தேதி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது சிம்பு பேசுகையில், "இந்த படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடித்துள்ளார். எனக்கு தெரிந்து வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் இப்போது எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். அந்தளவுக்கு பிசியாகிவிட்டார். இப்படம் வெளியான பின்பு இன்னும் பிசியாகி விடுவார் என்று நினைக்கிறேன். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஃபரூக் பாட்ஷா, அவரு பெயரிலே ஒரு ஃபயர் இருக்கும். பாட்ஷா மாறி இப்படத்தில் வேலை பார்த்துள்ளார். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும் கவுதம் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு குறைவாக இடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தது. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எல்லாருக்கும் சமமான இடத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார்.
இதுபோன்று நிறைய நடிகர்களுக்கு சமமான இடம் கொடுக்கப்பட்டதாக விக்ரம் படத்தில் பார்த்தேன். அது போல் இப்படத்திலும் அனைவருக்கும் சமமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒப்புக்கொள்வதற்கு முக்கியமான காரணம் கவுதம் கார்த்தி தான். ஆக்ஷன் காட்சிகளில் ஈசியாக நடித்து விட்டார். அதை அவரிடம் ரொம்ப ரசித்தேன். ஏ.ஆர். ரஹ்மான் அவருடைய பிஸியான நேரத்தில் இப்படத்தை கவனித்து வருகிறார். அவருக்கு ஸ்பெஷல் நன்றி" என்றார்.