'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட பிரச்னையும் தாண்டி சிம்பு நடிப்பில் 'செக்கச் சிவந்த வானம்' படம் தங்குதடையின்றி வெளியாகி வெற்றிபெற்றது. இதையடுத்து சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'அ அ அ' பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீண்டும் சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில்..."சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் இதற்கிடையே விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதையறிந்த சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."எனது ரசிகர்களுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கு ஓர் அழுத்தமான வேண்டுகோள். திரைத்துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வருந்தாதீர். எந்த ஒரு தனி நபரின் முடிவும் நம்மை ஓரங்கட்டிவிட முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அது குழு உறுப்பினர்களால் கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். அதனால் பதற்றப்பட வேண்டாம். யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம். எப்போதுமே அன்பை பரப்புங்கள். உங்களது தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாம் நமது கடமையை செய்வோம். தானாக வழி பிறக்கும். பொங்களுக்கு எப்படியும் திரைக்கு வருவோம்" என கூறியுள்ளார்.