வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு மாநாடு மற்றும் மஃப்தி தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனிடையே ஹன்சிகாவின் 50வது படமான மஹா படத்தில் கெஸ்ட் ரோல் நடித்துக்கொடுத்தார். அப்போது மஃப்தி பட ஷூட்டிங்கிலும் பங்குபெற்றார். மாநாடு ஷூட்டிங்கிற்கு மட்டும் செல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இதனால் மாநாடு படக்குழு சிம்புவை படத்திலிருந்து நீக்கியது.
கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் மஃப்தி. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா வாங்கியிருந்தார். கன்னட படத்தை இயக்கிய நார்தன் தான் தமிழிலும் படத்தை இயக்கினார். சிம்பு சிவ ராஜ்குமார் கதாபாத்திரத்திலும், கௌதம் கார்த்திக் ஸ்ரீமுரளி கதாபாத்திரத்திலும் நடித்தனர். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொண்டார். சிம்புவும் கொடுத்த தேதிகளுக்கு நடித்து கொடுத்திருக்கிறார். ஷூட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அச்சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக சிம்பு எப்போது தேதிகள் கொடுப்பார் என்று காத்திருந்தது படக்குழு. தேதிகள் தராமல் படத்துக்காகக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் சிம்பு கையெழுத்திட்டுத் தராமல் இழுத்தடிப்பதாகவும் கூறுகிறார்கள். இந்தப் படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இணைத்து புகார் கடிதமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா என்று வதந்தி ஒன்று பரவியது.
இதையடுத்து ஞானவேல்ராஜா, சிம்பு இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்கு தேதிகள் கொடுப்பதற்கான ஆலோசனையில் இருக்கிறோம். ஷூட்டிங் நல்லபடியாகதான் சென்றுக்கொண்டிருக்கிறது. யாரோ தவறான செய்திகளை பரப்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.