
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 8ஆம் தேதி (08.03.2025) அன்று இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி (Symphony Live Performance), நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02.03.2025) நேரில் சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது.
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் சமூக வலைத்தள பதிவை குறிப்பிட்டு இளையாராஜா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளபதிவில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன. மிக்க நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.