வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சித்து குமார் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக சந்தித்தோம்; அப்போது அவர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கண்ணை நம்பாதே படத்தில் இயக்குநர் விரும்பும் வகையிலான இசையை உருவாக்குவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. குறிப்பிட்ட தீம் என்று இல்லாமல் காட்சிகளுக்கு ஏற்ப இந்தப் படத்தில் இசையமைத்தேன். காட்சிகளின் எமோஷனுக்கு ஏற்றவாறு இசை இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். யுவன் சாரின் இசை எதார்த்த வாழ்க்கையை ஒட்டியே இருக்கும். அதுதான் எனக்கும் இன்ஸ்பிரேஷன். கண்ணை நம்பாதே படத்தில் வேலை செய்யும்போது பொறுப்புணர்வு அதிகம் இருந்தது. அதனால் பதட்டமும் இருந்தது
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நான் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் ஆடியன்ஸ் இசையை ரசித்தனர். மக்களின் மனநிலையைக் கணிப்பது கடினம். சிவப்பு மஞ்சள் பச்சை கதையை சசி சார் என்னிடம் சொல்லும்போது அதில் யார் நடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அதன்பிறகு தான் சித்தார்த் மற்றும் ஜி.வி. பிரகாஷ் அதில் நடிப்பது தெரிந்தது. அவர்கள் இருவருமே இசைஞானம் பெற்றவர்கள். அவர்களுக்கு நான் இசையமைக்கப் போகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் ஜி.வி சார் போனில் அழைத்து உற்சாகப்படுத்தினார்.
ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரை உற்சாகப்படுத்துவது இங்கு தான் நடக்கும் என்று நினைக்கிறேன். ஜிவி சாரின் இசை அனைத்திலும் ஒரு உயிர் இருக்கும். யுவன் சாரின் வெறியன் நான் என்று சொல்லலாம். புதுப்பேட்டை படத்தில் வரும் 'ஒரு நாளில்' பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அஸ்வின் அண்ணாவும் நானும் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் பண்ண வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தோம். கேரள மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்தபோது கிடைத்த ஐடியா தான் 'அடிபொலி'.
தமிழர்கள் மற்றும் மலையாளிகள் இருவருக்கும் பொதுவான பல வார்த்தைகளை இதில் பயன்படுத்தியுள்ளோம். கதை சொல்லல் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்கும் எண்ணம் இப்போது இல்லை. கண்ணை நம்பாதே படத்தின் இயக்குநர் மாறன் சார் ரொம்ப அமைதியானவர். என்னுடைய வேலைகளுக்கு அவரிடம் பெரிதாக ரியாக்சன் எதுவும் இருக்காது. ஒருவேளை என்னுடைய இசை அவருக்குப் பிடிக்கவில்லையோ என்று கூட நான் நினைத்தேன். ஆனால் அமைதியாக இருப்பது அவருடைய இயல்பு என்பதை அதன்பிறகு தான் புரிந்துகொண்டேன்.
என்னுடைய நண்பன் ராமகிருஷ்ணா எனக்கு வெற்றிப் பாடல்களை எழுதும் பாடலாசிரியராகவும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இருவரும் சேர்ந்து பல கனவுகள் கண்ட காலங்கள் உண்டு. அவை இன்று நிறைவேறி வருகின்றன. நெகிழ்வாக இருக்கிறது. புகழேந்தி சாருக்கும் என்னுடைய நன்றிகள். என்னோடு பணியாற்றிய இன்னும் பலருக்கும், ரசிகர்களுக்கும் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.