வினோத்.டிஎல். இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ரங்கா திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிபிராஜை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் ரங்கா திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
ரங்கா எனக்கு தற்செயலாக அமைந்த படம். படத்தின் தயாரிப்பளார் விஜய் கே செல்லையா எனக்கு நல்ல நண்பர். அவர்தான் ஒருநாள் கால் பண்ணி வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதை இருக்கு, கேட்குறீங்களா என்று கேட்டார். கதை கேட்டதும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதனால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன். இந்தப் படத்தில் ஹீரோவின் ஒரு கை அவன் பேச்சை கேட்காது.
படத்தின் ட்ரைலரை பிரபாஸ் சாருக்கு அப்பா அனுப்பினார்போல. எல்லோருக்கும் அனுப்புவதுபோல அவருக்கும் அனுப்பியிருக்கார். அவருக்கு ட்ரைலர் பிடித்ததும் நான் ஷேர் பண்றேன் என்று கூறி ட்விட்டரில் ஷேர் செய்தார். நாம் கேட்டால் கூட சிலர் ஷேர் செய்யமாட்டார்கள். ஆனால், கேட்காமலே பிரபாஸ் சார் ஷேர் செய்து அந்த ட்ரைலர் நிறைய பேரை சென்றடைய உதவினார். 2000 கோடிவரை வசூல் செய்த பாகுபலி படங்களின் ஹீரோ எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் வளர்ந்துவரும் நடிகரை இப்படி ஊக்கப்படுத்தும் விதம் ரொம்பவும் பிடித்திருந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள 'தீராமல்...' என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். கேட்டதும் உடனே வந்து பாடிக்கொடுத்தார். அவருக்கு நன்றி.
கல்யாணமாகி ஹனிமூன் செல்லும் ஒரு ஜோடி, எதிர்பாராதவிதமாக அங்கு ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறது. அங்கிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள், அங்கிருக்கும் மிகப்பெரிய க்ரைமை ஹீரோ எப்படி உடைத்தான் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் ஹீரோவுக்கு ஒரு கை அவன் பேச்சை கேட்காது. முதல்பாதியில் இந்தக் கைதான் அவனுக்கு பிரச்சனையாக இருக்கும். இரண்டாம் பாதியில் அதே கைதான் பிரச்சனையை தீர்த்துவைக்கும். ஆக்ஷன் திரில்லர் பாணியில் சுவாரசியமான படமாக ரங்கா இருக்கும்.
அப்பா பெரியார் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததுபோல தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க எனக்கு ஆசை உள்ளது. அது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்தது. வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறை நாடகமாக எடுத்த ஸ்ரீராம் என்பவர்தான் என்னை அணுகினார். ஆனால், கரோனா காரணமாக அது முடியாமல் போய்விட்டது.